பழனி: சண்முக நதிக்கரையில் கரையாத விநாயகர் சிலைகள் - நீர் மாசடைவதாக பொதுமக்கள் அச்சம்

பழனியில் சண்முக நதியில் விநாயகர் சிலைகள் கரையாததால் நீர் மாசடைந்து வருவதாகக் கூறி அவற்றை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குப் பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படாத சிலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது சண்முக நதியில் போதிய நீர் இல்லாத காரணத்தால், நதிக்கரையில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பள்ளங்கள் தோண்டப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டன. இருப்பினும், தற்போது சுமார் 150 சிலைகள் முழுமையாகக் கரையாமல் நீரில் மிதந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சிலைகள் கரையாமல் இருப்பது, தமிழ்நாட்டுக் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள வழிகாட்டுதல்களை மீறிய செயல் என்று அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிலைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடும் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் எனப்படும் வேதிப்பொருட்கள் சிலைகளில் கலக்கப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனால் நதியின் தண்ணீர் கருமை நிறமாக மாறி, மாசுபட்டு வருவதாகவும், இது நிலத்தடி நீரையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாகப் பழனி நகரமன்ற துணைத் தலைவர் கே.கந்தசாமி கூறுகையில், இந்து அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே நதிக்கரையில் தற்காலிகப் பள்ளங்கள் தோண்டப்பட்டு சிலைகளை கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பல சிலைகள் இன்னும் கரையாமல் அப்படியே இருப்பது கவலையளிக்கிறது என்று தெரிவித்தார். இது குறித்த விரிவான புகார்கள் எழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யப்போவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலைகளின் மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும், அதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள், கரையாத சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு விதித்த விதிமுறைகளை மீறி ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி சிலைகளை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்காலிகக் குட்டைகளில் உள்ள நீரையும் சிலைகளையும் விரைவில் அகற்றுவதன் மூலம் மட்டுமே, அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான சுகாதாரக் கேடுகளைத் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.









