பரமத்தி வேலூர் தனியார் மருத்துவமனை மீது புகார்: சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல்

நாமக்கல் அருகே தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொய்சேரியைச் சேர்ந்தவர் கே. கவிக்சா. மூன்றாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கவிக்சா, கடந்த ஆகஸ்ட் 24 அன்று பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவரது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கட்டு போடப்பட்ட நிலையில், சிறுமிக்கு காலில் கடுமையான வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையின் சிகிச்சையில் திருப்தியடையாத குடும்பத்தினர், சிறுமியைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இறுதியில் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காட்டியபோது, சிறுமியின் வலது காலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 30 அன்று புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்கால் வரை கால் அகற்றப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 5 அன்று சிறுமி உயிரிழந்தார்.
தனது மகள் உயிரிழப்பிற்கு அந்த தனியார் மருத்துவமனையின் முறையற்ற சிகிச்சையே காரணம் என்று குற்றம் சாட்டிய சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமியின் உடலை பரமத்தி வேலூரில் உள்ள அந்த தனியார் மருத்துவமனை முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய்சேரி மற்றும் குப்பச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மருத்துவமனை தரப்பிலிருந்து முறையான பதில் கிடைக்காததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறுமியின் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.









