ஹாலிவுட் திரையுலகில் புதிய சகாப்தம்: வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் பேராமவுண்ட் - முக்கிய ஒப்பந்தம் உறுதி

பேராமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் இடையிலான பிரம்மாண்டமான இணைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மாநிலங்களின் எதிர்ப்பு விலக்கப்பட்டு, தீர்வு எட்டப்பட்டுள்ளது.
ஹாலிவுட் திரையுலகின் மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கையாகக் கருதப்படும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தின் இணைப்பு விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. டேவிட் எலிசன் தலைமையிலான பேராமவுண்ட் நிறுவனம், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக 12 அமெரிக்க மாநிலங்கள் இணைந்து தாக்கல் செய்திருந்த வழக்கில் தற்போது சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் தொலைக்காட்சி, செய்தி ஊடகம் மற்றும் சினிமா துறைகளை உள்ளடக்கிய பிரம்மாண்டமான ஹாலிவுட் சாம்ராஜ்யம் உருவாக உள்ளது.
சுமார் 81 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த மெகா இணைப்பு ஒப்பந்தத்திற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது. இருப்பினும், இந்த இணைப்பு சந்தையில் ஏகபோக உரிமையை உருவாக்கும் என்று குற்றம் சாட்டி, கலிபோர்னியா உள்ளிட்ட 12 ஜனநாயகக் கட்சி ஆதரவு மாநிலங்கள் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டன. கலிபோர்னியா, அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், மாசசூசெட்ஸ், மினசோட்டா, நெவாடா, நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூயார்க், ஓரிகான் மற்றும் வாஷிங்டன் ஆகிய மாநிலங்கள் இந்த வழக்கை முன்னெடுத்திருந்தன.
இந்த சட்டப்போராட்டத்தின் முடிவில், பேராமவுண்ட் நிறுவனம் சில முக்கிய நிபந்தனைகளை ஏற்க சம்மதித்துள்ளது. குறிப்பாக, சிபிஎஸ் நியூஸ் மற்றும் சிஎன்என் ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு சுதந்திரமான ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பேராமவுண்ட் நிறுவனம் ஆண்டுக்கு குறைந்தது 30 திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறை மற்றும் செய்தி நிறுவனங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கைக்கு சவுதி அரேபியா, கத்தார் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளின் இறையாண்மை சொத்து நிதியங்களிலிருந்து சுமார் 24 பில்லியன் டாலர் மூலதனம் திரட்டப்பட்டுள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர் லாரி எலிசனும் இந்த ஒப்பந்தத்திற்கு முக்கிய உத்தரவாதங்களையும் நிதி ஆதாரங்களையும் வழங்கியுள்ளார். ஹாலிவுட் திரையுலகின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த இணைப்பு நடவடிக்கை முறையாக நிறைவு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.









