ஹாலிவுட் திரையுலகில் புதிய சரித்திரம்: 81 பில்லியன் டாலர் மதிப்பில் பாரமவுண்ட் - வார்னர் பிரதர்ஸ் இணைப்பு

ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களான பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் இணைந்ததை அடுத்து, ஸ்கைடான்ஸ் என்ற பிரம்மாண்டமான புதிய ஊடக நிறுவனம் உருவானது.
ஹாலிவுட் ஊடக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பாரமவுண்ட் நிறுவனம், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை 81 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் கையகப்படுத்தும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பின் மூலம், திரையுலகம் மற்றும் செய்தி ஊடகத் துறையில் பிரம்மாண்டமான ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் புதிய நிறுவனம் உருவாகியுள்ளது. இனி வார்னர் பிரதர்ஸ் மற்றும் பாரமவுண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் ஸ்கைடான்ஸ் என்ற ஒரே பெயரின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெகா ஒப்பந்தத்தின் கீழ், ஹாரி பாட்டர் முதல் டாப் கன், தி காட்பாதர் மற்றும் சிஎன்என் உள்ளிட்ட உலகின் முன்னணி திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் டேவிட் எலிசன் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி யனோன் க்ரைஸ் ஆகியோரின் கீழ் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பாரமவுண்ட் நிறுவனத்தை கடந்த ஆண்டு 8 பில்லியன் டாலருக்கு வாங்கிய ஸ்கைடான்ஸ், தற்போது வார்னர் பிரதர்ஸையும் இணைத்ததன் மூலம், சுமார் 111 பில்லியன் டாலர் மதிப்பிலான மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்த இணைப்பு நடைமுறைக்கு வரும் முன்னரே பல அரசியல் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது. குறிப்பாக அமெரிக்காவின் 12 மாநிலங்கள், இந்த இணைப்பு சந்தையில் போட்டியை குறைக்கும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. பின்னர், உள்நாட்டு திரைப்பட உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் சிஎன்என், சிபிஎஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் தலையற்ற செயல்பாட்டை உறுதி செய்ய ஒரு சுதந்திர வாரியத்தை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு தேவையான பெரும் தொகையை சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் முதலீடுகள் மூலம் திரட்டியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பு ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் படைப்பாளிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஜேன் போண்டா, மார்க் ருஃபாலோ உள்ளிட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள், இந்த இணைப்பு திரைப்படத் துறையில் வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் மற்றும் பார்வையாளர்களுக்குத் தரமான படைப்புகளை வழங்கும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தும் என்று எச்சரித்திருந்தனர். இருப்பினும், டேவிட் எலிசன் தரப்பு, தாங்கள் திரைப்படத் தயாரிப்பிலும், சுதந்திரமான செய்தி வெளியீட்டிலும் உறுதியாக இருப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த புதிய நிறுவனத்தின் செயல்பாடுகள் உலக ஊடக மற்றும் திரைப்படச் சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.









