பரனூர் சுங்கச்சாவடியில் புதிய மாற்றம்: தடையற்ற கட்டண வசூல் முறை அறிமுகம்

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் தடையற்ற கட்டண வசூல் முறை அமலுக்கு வந்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில், வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய தடையற்ற கட்டண வசூல் முறையை (Multi-Lane Free Flow - MLFF) இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், சென்னை மற்றும் திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்படாமல் பயணத்தைத் தொடர முடியும்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தானியங்கி முறையில் கண்டறியும் (ANPR) கேமராக்கள் மற்றும் பாஸ்டேக் (FASTag) தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியைக் கடக்க செலவிடும் நேரத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த சுங்கச்சாவடி தடைகள் அகற்றப்பட்டு, இனி வரும் காலங்களில் பழைய கட்டமைப்பு முழுமையாக அகற்றப்பட உள்ளது.
இருப்பினும், இந்த புதிய முறையில் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சுங்கச்சாவடிகளில் மனித தலையீடு இல்லாததால், பாஸ்டேக் கணக்கில் போதிய இருப்பு இருப்பதை வாகன ஓட்டிகள் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை பாஸ்டேக்கில் போதுமான பணம் இல்லையெனில் அல்லது செல்லாத பாஸ்டேக் பயன்படுத்தப்பட்டால், வாகன உரிமையாளர்களுக்கு இ-சலான் (e-challan) மூலம் கட்டணம் விதிக்கப்படும். இத்தகைய சூழலில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 200 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.
இந்த இ-சலான் தொகையை 72 மணி நேரத்திற்குள் செலுத்தத் தவறினால், அபராதத் தொகை இரண்டு மடங்காக உயர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 400 சதவீதம் வரை வசூலிக்கப்படும். நிலுவைத் தொகையைச் செலுத்தாதவர்களின் பாஸ்டேக் கணக்கு தானாகவே முடக்கப்படும். மேலும், இந்த அபராத விவரங்கள் வாகனங்களின் வாஹன் (VAHAN) இணையதளத்துடன் இணைக்கப்படுவதால், போக்குவரத்து தொடர்பான பிற சேவைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதேபோன்ற தடையற்ற கட்டண முறையை சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சென்னைசமுத்திரம் மற்றும் நெமிலி சுங்கச்சாவடிகளிலும் விரைவில் நடைமுறைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.









