ஆம்பூரில் அதிர்ச்சி: வறுமையின் காரணமாக 9 நாள் பெண் குழந்தையை விற்ற பெற்றோர் - ஒருவர் கைது

ஆம்பூரில் பிறந்த ஒன்பது நாள் பெண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெற்றோர் மற்றும் வாங்கிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் வறுமையின் காரணமாக பிறந்த ஒன்பது நாள் பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்கா தோப்பு பகுதியைச் சேர்ந்த ரஹமதுல்லா மற்றும் அவரது மனைவி அவமா ஆகியோருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. ரஹமதுல்லா தேநீர் கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், அவமா இல்லத்தரசியாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், அதில் ஒரு குழந்தை சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தம்பதியினர், புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட முடியாமல் குழந்தையை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த இந்த பெண் குழந்தையை, பெங்களூருவைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விற்பனை செய்ய பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். ரஹமதுல்லாவின் உறவினரான சம்ரின் தாஜ் மற்றும் அவரது கணவர் சையத் அக்பர் பாஷா ஆகியோரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு அவமாவின் சகோதரி முபினா உடந்தையாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத விற்பனை குறித்த ரகசியத் தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்றதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பெங்களூருவில் இருந்த பச்சிளம் குழந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குழந்தையின் தாய் அவமா மற்றும் குழந்தையை வாங்கிய சம்ரின் தாஜ், சையத் அக்பர் பாஷா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சம்ரின் தாஜ் மற்றும் அவமா ஆகியோருக்கு காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், சையத் அக்பர் பாஷா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தையின் தந்தையான ரஹமதுல்லா தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், காவல்துறையினர் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்திய நீதி சம்மீதா (BNS) பிரிவு 143(1)(f) மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









