dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தேனி: சாலையில் பட்டாசு வெடித்ததைக் கண்டித்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை - 6 பேர் கைது

By K. ராதாகிருஷ்ணன்
188 views
தேனியில் சாலையில் பட்டாசு வெடித்ததைக் கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனியில் சாலையில் பட்டாசு வெடித்ததைக் கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள சமாதர்மபுரம் பகுதியில் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த வாலிபர்களைக் கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் (57), மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், தேனி டிஎஸ்பி அலுவலக முகாமில் பணிபுரியும் போது ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபோதையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த கும்பலை, பொது பாதுகாப்பு கருதி அவர் கண்டித்துள்ளார். அந்தச் செயலை அவர் தனது செல்போனில் பதிவு செய்ய முயன்றபோது, வாக்குவாதம் முற்றி அந்த கும்பல் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தேனி காவல்துறையினர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக தேனி நகர காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கௌதம், இது திட்டமிட்ட கொலை அல்ல என்றும், சாலையில் போக்குவரத்தை மறித்து பட்டாசு வெட்டியதைத் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட மோதல் விபரீதமாக முடிந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். சம்பவ இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது விசாரணையில் சவாலாக உள்ளதாகவும், பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கேமராக்களின் பராமரிப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அல்லிநகரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அரசு மரியாதையுடன் காவல்துறை அணிவகுப்பு மற்றும் 21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் தேனியில் உள்ள மின் மயானத்தில் நடைபெற்றன. இச்சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. மறைந்த செந்தில்குமாருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#தேனி
#காவலர் கொலை
#சட்டம் ஒழுங்கு
#தமிழக செய்தி
#பட்டாசு விபத்து
#Theni news
#Police officer killed
#Tamil Nadu crime
#Theni incident
#Justice for Senthilkumar
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications