பொள்ளாச்சியில் சிறுவர் திருமண விவகாரம்: தன்னை சிக்க வைத்ததாக காவல்துறை மீது சமூக ஆர்வலர் புகார்

பொள்ளாச்சியில் தன்னை பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாகக் கூறி காவல் அதிகாரிகள் மீது சமூக ஆர்வலர் ஒருவர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏ.வி.ஆர். அருண் பிரசாத் (33) என்பவர், தனது மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில், சிறுவர் திருமணம் ஒன்றை வலுக்கட்டாயமாக நடத்தி வைத்ததாகவும், இரண்டு சிறுவர்களை கடத்தி அவர்களிடம் பணம் பறித்ததாகவும் அருண் பிரசாத் மீது கோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், தான் சமூகப் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால், பழிவாங்கும் நோக்கத்தில் காவல்துறை இந்த வழக்கில் தன்னைச் சிக்க வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி, சட்டவிரோத மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, குட்கா கடத்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பு போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகத் தான் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த சிறுவர் திருமணம் குறித்த தகவல் தனக்குத் தெரிந்தபோது, அது குறித்து காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்குத் தானே முதலில் தகவல் தெரிவித்ததாக அவர் கூறுகிறார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மன அழுத்தத்தில் இருந்ததால் அவர்களுக்கு உதவ முன்வந்த தன்னை, காவல்துறையினர் உள்நோக்கத்துடன் குற்றவாளியாகச் சித்தரித்துள்ளதாக அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் தங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்காகத் தன்னைப் பழிவாங்கவே இந்தச் சதியைச் செய்துள்ளதாக அருண் பிரசாத் வலுவாக வாதிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ள அவர், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள், கைது குறிப்பாணை, காவல் நிலைய பதிவேடுகள், அழைப்பு விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை முறையாகப் பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பொள்ளாச்சி டிஎஸ்பி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும், வெளியூர் காவல்துறை அதிகாரி அல்லது சுதந்திரமான அமைப்பின் மூலம் இந்த வழக்கின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் அல்லது வெளிப்புற அழுத்தங்கள் இந்த வழக்கில் உள்ளதா என்பது குறித்தும் விரிவான விசாரணை தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









