dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே பள்ளி குடிநீரில் பிளீச்சிங் பவுடர் கலப்பு: 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

By Admin
19/08/2026
103 views
பொள்ளாச்சி அருகே பள்ளி குடிநீரில் பிளீச்சிங் பவுடர் கலப்பு: 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளியில் குடிநீரில் பிளீச்சிங் பவுடர் கலந்ததால் 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள உஞ்சவேலம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடிநீர் அருந்திய பிறகு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதிய உணவை முடித்த பிறகு, பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீரை அருந்திய சுமார் 20 மாணவர்களுக்கு கடுமையான தொண்டை எரிச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மாணவர்களுடன் சேர்த்து, அதே தண்ணீரை அருந்திய ஆசிரியர்களுக்கும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்து, பொதுமக்களின் உதவியுடன் அவர்களை பொள்ளாச்சியில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 11 சிறுவர்கள் மற்றும் 9 சிறுமிகள் என மொத்தம் 20 குழந்தைகள் குழந்தைகள் நல வார்டில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியில் உரிய கண்காணிப்பு இல்லை என்றும், ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறி மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதுடன், காவல்துறையினருக்கும் பெற்றோர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், செவ்வாய்க்கிழமை காலை பள்ளி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டபோது அதிகப்படியான பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. தொட்டியைச் சுத்தம் செய்த பிறகு தண்ணீர் வெளியேற்றப்படாமல், உடனடியாக விநியோகம் செய்யப்பட்டதால் தண்ணீரில் பிளீச்சிங் பவுடரின் அடர்த்தி அதிகமாக இருந்துள்ளது. மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, தண்ணீர் மாதிரிகளையும் சேகரித்து சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கோவை
#பொள்ளாச்சி
#மாணவர்கள்
#அரசுப்பள்ளி
#செய்திகள்
#Coimbatore
#Pollachi
#SchoolStudents
#TamilNaduNews
#PublicHealth
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications