பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் நிலச்சரிவு: 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் போக்குவரத்து சீரமைப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு 15 மணி நேரத்திற்குப் பிறகு சரி செய்யப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் நேற்று இரவு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அட்டகட்டி அருகே உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் இந்த இயற்கை சீற்றம் நிகழ்ந்தது. சாலையின் குறுக்கே பிரம்மாண்டமான பாறைகள் உருண்டு விழுந்ததோடு, மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் தார் சாலை பலத்த சேதமடைந்து, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலச்சரிவின் விளைவாக அந்த மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பாதியில் நின்றன. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியதால், உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் சிக்கித் தவித்ததாக தகவல்கள் வெளியாகின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பொள்ளாச்சி உதவி ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய இரு முனைகளிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 15 மணி நேர தீவிர மீட்புப் பணிக்குப் பிறகு, ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தி சாலையில் விழுந்த பாறைகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டன. சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் தொடர் முயற்சியால் புதன்கிழமை பிற்பகல் முதல் போக்குவரத்து ஓரளவிற்கு அனுமதிக்கப்பட்டது. எனினும், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் மட்டுமே தற்போது இந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மலைப்பாங்கான கடினமான நிலப்பரப்பு என்பதாலும் மீதமுள்ள கற்களை அகற்றும் பணியும், நிரந்தர சாலை சீரமைப்பு பணிகளும் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையின் தாக்கம் குறையும் வரை மலைப்பாதையில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வால்பாறை பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிலச்சரிவு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.









