பிரபாஸின் 'ஃபௌஜி' படத்தின் முக்கிய அப்டேட்: பிறந்தநாளில் வெளியாகும் சிறப்பு வீடியோ

பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஃபௌஜி' திரைப்படத்தின் கதைக் களம் மற்றும் கதாபாத்திரத்தை விளக்கும் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகிறது.
நடிகர் பிரபாஸ் தற்போது பல திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் உருவாகும் ஃபௌஜி திரைப்படம் உள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி சங்கர் யெலமஞ்சிலி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். தொடக்கத்தில் இந்தத் திரைப்படம் குறித்த வெளியீட்டு தேதிகள் சில எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தாலும், தற்போது படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் ரவி சங்கர், ஃபௌஜி திரைப்படம் குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர் 23-ஆம் தேதியை முன்னிட்டு, படத்தின் கதைக் களம் மற்றும் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்து ரசிகர்களுக்கு ஒரு சிறு அறிமுகத்தை அளிக்கும் வகையில், ஒரு சிறிய வீடியோ கிளிம்ப்ஸ் வெளியிடப்படும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது படத்தின் கதை என்ன என்பதையும், ரசிகர்கள் எத்தகைய கதையம்சத்தை எதிர்பார்க்கலாம் என்பதையும் தெளிவாகக் காட்டும் வகையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பாகுபலி படத்துடன் ஒப்பிட்டுத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ரவி சங்கர், இது முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்டது என்று விளக்கமளித்தார். பாகுபலிக்குப் பிறகு பிரபாஸின் கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். தயாரிப்பாளர்கள் தங்களின் 418 திரைப்படத்துடன் சேர்த்து இந்த ஃபௌஜி படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் ராம் சரண் இணையும் புதிய திரைப்படம் குறித்தும் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தற்போது லண்டனில் இருக்கும் இயக்குநர் சுகுமார் இந்தியா திரும்பியதும், அக்டோபர் 26 அல்லது 27-ஆம் தேதிகளில் படத்தின் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், நவம்ப்ர் 13-ஆம் தேதி வெளியாகவிருக்கும் டொங்கா நா கொடுகு திரைப்படத்தின் பணிகளில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தில் மௌலி தனுஜ் பிரசாந்த் நாயகனாக நடிக்க, சீனு கம்பலா இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









