வெள்ளித்திரையில் மீண்டும் இணையும் பிரபுதேவா - ஏ.ஆர். ரஹ்மான்: மூன்வாக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபுதேவா - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்வாக் திரைப்படம் தீபாவளி 2026-க்கு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல கிளாசிக் பாடல்களைத் தந்த பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து ஒரு புதிய மாயாஜாலத்தை நிகழ்த்த காத்திருக்கிறது. பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மனோஜ் என்.எஸ். இயக்குநராக அறிமுகமாகும் மூன்வாக் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் ஒரு முழுநீள கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், வரும் தீபாவளி 2026 பண்டிகையன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு முக்கிய வேடத்தில் திரையிலும் தோன்றுகிறார். படத்தில் அவர் ஒரு கோபக்கார இளம் திரைப்பட இயக்குநராக நடிக்க, பிரபுதேவா 'பாபூட்டி' என்ற பெயரில் இளம் நடன இயக்குநராக நடித்துள்ளார். இவர்களது முந்தைய கூட்டணியில் வெளியான காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் மின்சார கனவு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த புதிய கூட்டணியும் அந்த வெற்றியைத் தக்கவைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் ஏ.ஆர். ரஹ்மானே பாடியிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்தத் திரைப்படத்தில் மொத்தம் 16 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இயக்குநர் மனோஜ் கதையை விவரிக்கும் போது, தனக்கு ஒரு கதாபாத்திரம் மட்டுமே இருக்கும் என்று நினைத்ததாகவும், ஆனால் ஸ்கிரிப்ட்டில் 16 கதாபாத்திரங்கள் இருப்பதை அறிந்து வியந்ததாகவும் யோகி பாபு முன்பு பகிர்ந்திருந்தார். இது படத்திற்குப் பெரிய நகைச்சுவை பலத்தைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பிரபுதேவா, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் யோகி பாபுவுடன் அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா சங்கர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
நடனம் மற்றும் இசையை மையமாகக் கொண்ட ஒரு மியூசிக்கல் படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை அனூப் வி. ஷைலஜா கவனிக்க, படத்தொகுப்பை ரேமண்ட் டெரிக் கிராஸ்டா செய்துள்ளார். நடன அமைப்பில் சேகர் வி.ஜே., பியூஷ் சாசியா மற்றும் சாண்டி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் என்.எஸ்., திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் எலாக் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம், 2026-ஆம் ஆண்டின் தீபாவளி ரிலீஸில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது.









