மீண்டும் இணையும் பிரபுதேவா - சிம்ரன்: சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் புதிய படம் குறித்த விவரங்கள்

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மற்றும் சிம்ரன் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரபுதேவா மற்றும் சிம்ரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது கூட்டணி கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான 'டைம்' திரைப்படத்தில் திரையில் தோன்றியிருந்தது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திர ஜோடி மீண்டும் இணையவிருக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு 'கமல் ஸ்ரீதேவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியோன் ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு இயக்குநராக அறிமுகமாகிறார். காதல் மற்றும் உணர்ச்சிகரமான கதைக் களத்தைக் கொண்ட இந்தத் திரைப்படம், பார்ப்பவர்களின் மனதை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான படப்பிடிப்பு பணிகள் சென்னை மற்றும் மூணார் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தற்போது படம் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது.
நடிகர் பிரபுதேவா மற்றும் சிம்ரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் மந்தாடி படப்புகழ் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தில் நடித்த ஸ்மேகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கூடுதல் பலமாக ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்களாக ஒளிப்பதிவாளர் சரண் வேலாயுதன், படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம், கலை இயக்குநர் சேகர் மற்றும் சண்டை பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்றுகின்றனர். இது ஒரு அழகான காதல் காவியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபுதேவா மற்றும் சிம்ரன் இதற்கு முன்பாக 'வி.ஐ.பி.' மற்றும் 'டைம்' போன்ற காதல் படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். பிரபுதேவா தற்போது 'மூன் வாக்' படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மறுபுறம், சிம்ரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'தர்மன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி பிஸியான காலகட்டத்திலும் இந்த நட்சத்திரக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









