மேகமலை வெளியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு: தொடர் போராட்டத்தில் மயங்கி விழுந்த முதியவர்கள்

தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வனத்துறை மேற்கொண்டு வரும் வெளியேற்ற நடவடிக்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 முதியவர்கள் மயங்கி விழுந்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் வருசநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை வனத்துறை வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறி, கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வெளியேற்ற நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மேகமலை மலைப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை கடமலைக்குண்டு பேருந்து நிலையத்தில் தங்கள் காலவரையற்ற போராட்டத்தின் மூன்றாம் நாளைத் தீவிரப்படுத்தினர். இப்பகுதிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் தங்களை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தக் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடமலைக்குண்டு அனைத்து வணிகர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பேரணியாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் இணைந்து அமர்ந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். வணிகர்களின் இந்த திடீர் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. வனத்துறையின் இந்த நடவடிக்கையானது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று வணிகர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் மற்றும் போராட்டக் களத்தில் நிலவிய கடுமையான நெரிசல் காரணமாக, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதில் வாலிப்பாறை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி மற்றும் சேகர் உட்பட நான்கு முதியவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அங்கிருந்த போராட்டக்காரர்கள் உடனடியாக இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். போராட்டக் களத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 108 அவசர கால ஊர்தி மருத்துவக் குழுவினர், மயங்கி விழுந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. வனத்துறையின் வெளியேற்ற அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.









