அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யத் தடை: பொது சுகாதாரத்துறையின் புதிய சுற்றறிக்கையால் கிளம்பிய சர்ச்சை

அரசு ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கக் கூடாது என பொது சுகாதாரத்துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு மருத்துவர் மற்றும் செவிலியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குநரகம் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கை, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள் அல்லது செயல்பாடுகளை பொதுவெளியிலோ, சமூக ஊடகங்களிலோ விமர்சிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக எதிர்மறையான கருத்துகளைப் பதிவிடுவதோ, கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்களைப் பகிர்வதோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் ஊழியர்கள் தெரிவிக்கக் கூடாது என்றும், இத்தகைய கருத்துகளை முன்வைக்கும் அல்லது தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரப்பூர்வமற்ற கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தை அரசுப் பணி என்ற பெயரில் பறிக்கக் கூடாது என்று தமிழ்நாடு செவிலியர்கள் அதிகாரமளித்தல் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களின் பணி நிரந்தரம் செய்யப்படாத சூழலிலும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படாத நிலையிலும், அரசு ஊழியர்களுக்கு எதிரான கொள்கைகளைத் தொடர்ந்து கேள்விக் கேட்கவே செய்வோம் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்கள் மற்றும் போராட்டங்கள் வாயிலாகத் தங்களின் கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்வோம் என அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம், இது வழக்கமான நடைமுறைதான் என்று குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு நிறுவனத்திலும் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நிறுவனத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிக்கக் கூடாது என்பது அடிப்படை விதி என்றும், அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து சொல்ல விரும்பும் எவரும் வேலையை விட்டு விலகிவிட்டுத் தாராளமாகச் சொல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றறிக்கை அரசு ஊழியர்களின் கடமைகளை நினைவூட்டும் நோக்கில் மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.









