புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்பாடு: மத்திய அரசிடம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி கோரிக்கை

புதுச்சேரி மாநில தரவு மையத்தை மேம்படுத்தவும், சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும் மத்திய அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை அமைச்சர் பி.ராஜவேலு கோரியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மாநில தரவு மையத்தை நவீனப்படுத்தவும், சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும் மத்திய அரசின் முழுமையான ஆதரவை அமைச்சர் பி.ராஜவேலு கேட்டுக்கொண்டுள்ளார். புது தில்லியில் நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், புதுச்சேரியை தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கிய முன்னுரிமை மாநிலமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான தொழில்நுட்ப சூழலை உருவாக்க மத்திய அரசின் உதவி இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதுச்சேரியில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அரைக்கடத்திகள் (Semiconductors), மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த முதலீடுகளை புதுச்சேரியில் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார். மேலும், புதுச்சேரியில் புதிதாகத் தொடங்கப்படும் உற்பத்தி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கும் அதே அளவிலான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்ய மத்திய அரசின் திட்டங்களுடன் மாநிலத்தை இணைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் புதுச்சேரி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விவரித்த அமைச்சர், பாரத்நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகள், கிராமப்புற பள்ளிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இழை இணைப்பு (Fibre connectivity) வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதோடு, சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் டிஜிட்டல் சேவைகளை ஒருங்கிணைக்கும் 'சாம்ருத் கிராம் டிஜிட்டல்' எனப்படும் பிகிட்டல் கிராம மாதிரியை சோதனை அடிப்படையில் செயல்படுத்த புதுச்சேரி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஸ்டார்ட்-அப் சூழல் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜவேலு, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள அடல் இன்குபேஷன் மையம் இதுவரை 60-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டியுள்ளதாகத் தெரிவித்தார். காரசூரில் அமையவிருக்கும் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பல்துறை சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றின் மூலம் சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், இதன் வாயிலாக 8,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே தொலைத்தொடர்பு தொடர்பான விதிகளை ஏற்று, மத்திய அரசின் ஆன்லைன் போர்ட்டலுடன் மாநிலத் துறைகளை இணைப்பதன் மூலம் ஒப்புதல் நடைமுறைகளை புதுச்சேரி அரசு எளிமைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.









