பூரி ஜெகந்நாத் - விஜய் சேதுபதி இணையும் ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு திரைப்பட படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
இயக்குநர் பூரி ஜெகந்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து பணியாற்றும் திரைப்படம் 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு'. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் படப்பிடிப்புடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாகத் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடிக்க, மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை தபு நடித்துள்ளார். மேலும், துனியா விஜய், ஜரீனா வஹாப், பிரம்மாஜி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு மிகவும் வலுசேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த ஆக்ஷன் டிராமா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. பூரி ஜெகந்நாத்தின் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் திரைக்கதை அமைப்பில் உருவாகும் இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுக வீடியோக்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, ஒளிப்பதிவை சாம் கே. நாயுடு மேற்கொள்ள, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை சந்தோஷ் நுஜில்லா கவனிக்க, விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை அனில் பாடூரி மேற்பார்வை செய்துள்ளார். இதற்கிடையே, விஜய் சேதுபதி கைவசம் வெற்றிமாறனின் 'அரசன்', மணிரத்னத்தின் 'இஞ்சி வெள்ளம்', தியாகராஜன் குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்' மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெய்ன்' எனப் பல பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.









