காசோலை மோசடி வழக்கு: நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

காசோலை மோசடி வழக்கில் நடிகர் ராஜ்பால் யாதவ் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் தொடர்புடைய காசோலை மோசடி வழக்கில், நிலுவைத் தொகையைச் செலுத்துவது தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் அவருக்கு இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரித்தபோது, குறிப்பிட்ட தொகையை நீதிமன்றப் பதிவேட்டில் டெபாசிட் செய்யுமாறு நடிகருக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ராஜ்பால் யாதவின் செயல்பாடு நம்பிக்கையூட்டும் வகையில் இல்லை என்று காட்டமாக விமர்சித்தனர்.
இந்த வழக்கு கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. ராஜ்பால் யாதவ் இயக்கிய 'அடா படா லாபடா' (Ata Pata Lapata) என்ற திரைப்படத்திற்காக, முரளி பிராஜெக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியிருந்தது. இந்தத் தொகையைத் திரும்பச் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால், 2012-ம் ஆண்டு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.11 கோடியைச் செலுத்த நடிகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு அவர் வழங்கிய ஏழு காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பப் பெறப்பட்டதால் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ரூ.2 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், தனது கடவுச்சீட்டை (Passport) ஒப்படைக்க வேண்டும் என்றும் நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து சிறைத் தண்டனை விதித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சரணடைவதிலிருந்து அவருக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ராஜ்பால் யாதவ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்தத் தகராறைத் தீர்க்க நடிகர் தயாராக இருப்பதாகவும், முறையான பணத்தைச் செலுத்தும் திட்டத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் ஏற்கனவே இந்த வழக்கில் சுமார் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். இருப்பினும், கடந்த 15 ஆண்டுகளாக முறையான தீர்வு எட்டப்படாததால், இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உச்ச நீதிமன்றம் உள்ளது. அக்டோபர் 5-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.









