நவம்பர் 5-ல் ரிலீஸாகும் ராமாயணம்: ரன்வீர் கபூர் - சாய் பல்லவி படக்குழுவின் அதிரடி அறிவிப்பு

ரன்வீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் திரைப்படம் திட்டமிட்டதை விட முன்னதாக நவம்பர் 5, 2026 அன்று திரைக்கு வருகிறது.
நீண்ட நாட்களாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புராண காவிய திரைப்படமான ராமாயணம்: ரைஸ் ஆஃப் ஏ லெஜண்ட் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. நமித் மல்கோத்ரா தயாரிப்பில் உருவாகும் இந்தப் பிரம்மாண்டமான படைப்பு, நவம்பர் 5, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக இந்தப் படம் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் முன்கூட்டியே மாற்றியமைத்துள்ளனர்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ரன்வீர் கபூர் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் ராவணனாக கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிக்கிறார். இவர்களுடன் அருண் கோவில் தசரத மன்னராகவும், சன்னி தியோல் அனுமாராகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடிக்கின்றனர். மேலும் ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, ஷீபா சாத்தா மற்றும் விவேக் ஓபராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் லாரா தத்தா மற்றும் ஷீபா சாத்தாவின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
தொழில்நுட்ப ரீதியாக இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹன்ஸ் சிம்மர் ஆகியோர் இந்தப் படத்திற்கு முதன்முறையாக இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை எட்டு முறை ஆஸ்கார் விருது வென்ற DNEG நிறுவனம் மேற்கொள்கிறது. ஸ்ரீதர் ராகவன் மற்றும் நிதேஷ் திவாரி இணைந்து திரைக்கதை அமைத்துள்ள இப்படம், பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படம் வெளியாவதற்கு முன்னரே இதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க, தசரா பண்டிகையன்று இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத் தொடரின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் நிலையில், இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ராமாயணம் காவியம் நவீன தொழில்நுட்பத்துடன் திரையில் காணக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









