வேலூரில் பரபரப்பு: ராணுவ ரகசியங்களை கசியவிட்ட ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் கைது

ராணுவ ரகசியங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்ததாக வேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் ஒருவர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதான பாபு பி என்பவர், கீழவெள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சுமார் 28 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2025-ம் ஆண்டு ராணுவ உபகரணங்கள் பிரிவில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பாபு பி என்பவர் அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் வாட்ஸ்அப் வழியாகத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்தப் பெண் தன்னை டிஆர்டிஓ (DRDO) நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரு திட்டத்திற்காகத் தகவல்கள் தேவைப்படுவதாக பாபுவிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய பாபு, ராணுவ உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான மிக முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை அவரிடம் பகிர்ந்துள்ளார். மேலும், பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகளிடம் இருந்தும் தகவல்களைத் திரட்டி வழங்கியிருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
உளவுத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாபு மற்றும் அந்தப் பெண் பயன்படுத்திய மொபைல் எண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. விசாரணையில், பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் அந்நிய நபர்களுக்குச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பாபுவை பிடித்து விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணின் உண்மை அடையாளம் மற்றும் அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவரா என்பது குறித்து தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தப் பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணையைத் தொடர்ந்து, வேலூர் தாலுகா காவல்துறையினர் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புத் தகவல்கள் கசிந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









