உத்தரகாண்டில் குடியேறத் திட்டம்: முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் உதவி கோரிய ரிஷப் பண்ட்

உத்தரகாண்டில் சொந்த வீடு கட்ட நிலம் பெற உதவுமாறு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் அம்மாநிலத்தில் ஒரு பெரிய நிலத்தை வாங்கி, அங்கு தனது முதல் சொந்த வீட்டை கட்டத் திட்டமிட்டுள்ளார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நிலம் வாங்குவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தெளிவற்ற சூழல் காரணமாக தன்னால் ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்ய முடியவில்லை என்று அவர் சமூக வலைதளத்தில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை டேக் செய்து அவர் பதிவிட்ட கருத்து பெரும் கவனத்தைப் பெற்றது. டெல்லியில் இருந்து தனது இருப்பிடத்தை உத்தரகாண்டிற்கு மாற்ற விரும்புவதாகவும், தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்க விரும்புவதாகவும் ரிஷப் பண்ட் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். விளையாட்டு வீரராக மாநிலத்திற்குப் பெருமை தேடித்தந்த தனக்கு, சொந்த மண்ணில் வீடு கட்டுவது ஒரு கனவுத் திட்டமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷப் பண்டின் இந்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அவரை உத்தரகாண்டின் பெருமை என்று புகழாரம் சூட்டினார். அவர் தனது அற்புதமான விளையாட்டு திறமையால் இந்தியாவிற்கும் உலகிற்கும் தேவபூமி உத்தரகாண்டின் பெயரைப் பெருமைப்படுத்தியுள்ளார் என்று பாராட்டினார். மேலும், சட்டத்திற்கு உட்பட்டு நிலம் வாங்குவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் மூலம் பெற்றுத் தருவதாக முதலமைச்சர் உறுதியளித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க ரிஷப் பண்ட் காட்டும் ஆர்வத்தை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு மாநில அரசு நிலத்தை அன்பளிப்பாக வழங்கினால் அது பெரும் கௌரவம் என்று கூறிய ரிஷப் பண்ட், அதேசமயம் அரசு நிர்ணயிக்கும் விலைக்கு நிலத்தை நேரடியாக வாங்கவும் தான் தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்தினார். இதற்கிடையில், ரிஷப் பண்ட் 2025-26 நிதியாண்டிற்கான உத்தரகாண்டின் அதிக வருமான வரி செலுத்தும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த மாதம் டேராடூனில் நடைபெற்ற வருமான வரி தின விழாவில் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.









