பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் ரசல் பிராண்டிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரபல நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ரசல் பிராண்டிற்கு பாலியல் பலாத்கார வழக்குகளில் 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் நகைச்சுவையாளரான ரசல் பிராண்ட், பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்களுக்காக லண்டன் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். தெற்குவார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த முக்கிய வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜோயல் பென்னாதன் வழங்கினார். கடந்த 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நான்கு வெவ்வேறு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தனது தீர்ப்பின் போது ரசல் பிராண்டின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பெண்களின் மறுப்புகளை அலட்சியம் செய்து, தனது புகழின் போதையில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி சுட்டிக்காட்டினார். புகழ்பெற்ற நபராக இருந்த காலத்தில், அவர் ஒரு பாலியல் வேட்டையாடுபவராக (sexual predator) மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்கிய ஜூரி குழுவினர், ரசல் பிராண்டிற்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு இந்தத் தீர்ப்பை வழங்கினர். எனினும், அவர் மீது சுமத்தப்பட்ட மற்ற மூன்று பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் தங்கள் வேதனையைப் பதிவு செய்தனர். ரசல் பிராண்டின் புகழ் மற்றும் சமூக அந்தஸ்து, அவர்கள் நீதி கேட்டு வெளியே வரத் தடையாக இருந்ததாகத் தெரிவித்தனர். 2023-ஆம் ஆண்டு வெளிவந்த ஆவணப்படம் மற்றும் விசாரணைகளுக்குப் பிறகுதான், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகப் புகார் அளித்தனர். புகழ்பெற்ற ஒரு நபர், பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வதை பொது ஊடகங்களில் கண்டு தாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
வழக்கறிஞர்கள் தரப்பில் ரசல் பிராண்டின் நற்பெயர் மற்றும் அவர் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டாலும், நீதிமன்றம் குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த தண்டனையை உறுதி செய்தது. ரசல் பிராண்ட் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த நிலையில், நீதிமன்றம் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளது.









