சைதாப்பேட்டை போராட்ட வழக்கு: திமுக எம்பி ஆ.ராசா மற்றும் மா.சுப்பிரமணியன் காவல்துறை விசாரணை

செப்டம்பர் மாதம் நடந்த போராட்டம் தொடர்பாக திமுக எம்பி ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
செப்டம்பர் 12-ம் தேதி சென்னையில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக எம்பி ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த விசாரணை நடைபெற்றது. போராட்டத்தின் போது முறையான அனுமதி பெறாமல் கூடியது மற்றும் தனிப்பட்ட விமர்சனங்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் இவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஆ.ராசா மீது அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குறித்து அவதூறாக பேசியது, சட்டவிரோதமாக கூடுதல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், உரிய அனுமதி பெறாமல் போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக மா.சுப்பிரமணியன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணையின் போது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தேவைப்படும் போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியதை அடுத்து இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, காவல்துறையினர் தன்னிடம் அடிப்படை கேள்விகளை மட்டுமே கேட்டதாகத் தெரிவித்தார். மேலும், தமக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை அல்லது புகார் நகலை காவல்துறை வழங்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். தற்போதைய தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கவே இதுபோன்ற விசாரணைகளும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் விமர்சித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சிறைச்சாலை உடைப்பு சம்பவங்கள் குறித்தும் கருத்து தெரிவித்த ஆ.ராசா, இது திட்டமிட்ட ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பினார். ஆ.ராசா மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் சட்டவிரோதக் கூட்டம், அவதூறு பேச்சு மற்றும் பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









