முதல்முறையாக கதாநாயகனாக களமிறங்கும் சாஜித் யாஹியா: ஸ்டீவ் அண்ட் பாலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் விபின் அட்லி இயக்கத்தில், நடிகர் சாஜித் யாஹியா கதாநாயகனாக நடிக்கும் 'ஸ்டீவ் அண்ட் பாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இயக்குநர் விபின் அட்லி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான ஸ்டீவ் அண்ட் பாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோச்சியில் நடைபெற்ற பாரம்பரியமான பூஜை நிகழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட சாஜித் யாஹியா, இந்தத் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதையின் நாயகனாக (Lead Actor) நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படம் கொச்சியில் வசிக்கும் ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதைக் களத்தை அமைத்துள்ளது. நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது. படத்தின் கதைக்களம் அந்த சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளை தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சாஜித் யாஹியா ஸ்டீவ் கதாபாத்திரத்திலும், அறிமுக நடிகர் சித்தார்த் சத்யா பாலி கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தில் சுதிர் சுகுமாரன், ஜூட் அந்தனி ஜோசப், ராஜேஷ் சர்மா, நியா லூக், முன்சிலா கிற்கோத் மற்றும் ஜேக்கப் ஜார்ஜ் ஜேம்ஸ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். எபிக் ஃபிலிம்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் என்.ஏ மோஷன் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. நரேஷ் குமார் ஜா மற்றும் நசீர் அகமது தயாரிக்கும் இப்படத்திற்கு லிஜு நாடேரி நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முகமது சத்தார்ஜி இசையமைப்பாளராகவும், ஜோசப் டேனியல் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர் ஜிபீஷ் படத்தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், கொச்சி மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஆலப்புழா மற்றும் மூணாறு போன்ற அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராகவும், இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ள சாஜித் யாஹியாவின் இந்த புதிய பரிமாணம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.









