dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

சேலம்: பாம்பு கடித்த சிறுமிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மறுப்பா? பெற்றோர் குற்றச்சாட்டு

By Admin
09/09/2026
47 views
சேலம்: பாம்பு கடித்த சிறுமிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மறுப்பா? பெற்றோர் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் வீரகனூரில் பாம்பு கடித்த சிறுமிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கங்கவல்லி அருகே உள்ள வீரகனூர் பகுதியில் வசித்து வந்த எட்டு வயது சிறுமி செஷிகா, பாம்பு கடித்ததன் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த ஆகஸ்ட் 28 அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டின் வெளியே காலை கழுவச் சென்றபோது, அவரது இடது காலில் ஏதோ ஒன்று கடித்ததாகத் தெரிகிறது. காலில் இரண்டு தழும்புகள் இருந்ததைக் கண்ட பெற்றோர், அது பாம்பு கடியாக இருக்கலாம் எனப் பதறிப்போய் அருகிலிருந்த வீரகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சுமார் மாலை 7 மணி அளவில் சுகாதார நிலையத்தை அடைந்தபோது, அங்கு மருத்துவர் எவரும் பணியில் இல்லை என்றும், செவிலியர் மட்டுமே இருந்தார் என்றும் குழந்தையின் தாயார் கிருஷ்ணவேணி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிகிச்சையின்போது சிறுமிக்கு வாந்தி மற்றும் பார்வைக் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உரிய முதலுதவி சிகிச்சை அளித்து, விஷமுறிவு ஊசி போடுமாறு பெற்றோர் கெஞ்சியும், செவிலியர்கள் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாததால், மிகுந்த சிரமத்திற்கு இடையே தனியார் வாகனம் மூலம் சிறுமியை அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்த வீரகனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து குழந்தையின் தாயார் கூறுகையில், மாலை 4 மணி வரை மட்டுமே மருத்துவர் பணியில் இருப்பார் என்றும், அதன் பிறகு தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்ததாகத் தெரிவித்துள்ளார். இது அந்தப் பகுதியில் உள்ள மருத்துவக் கட்டமைப்பின் மீதான பெரும் கேள்வியாக மாறியுள்ளது.

சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள், பாம்பு கடித்ததாகச் சந்தேகிக்கும் நிலையில் உரிய சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறுமிக்கு வாந்தி ஏற்பட்ட நிலையில் அவரை நிலைப்படுத்துவதற்கு முன்னதாகவே அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட செவிலியருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அவசர மருத்துவச் சேவைகள் முழுமையாகக் கிடைக்காததே இத்தகைய இழப்புகளுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#சேலம்
#பாம்புக்கடி
#சுகாதாரத்துறை
#செய்தி
#தமிழகம்
#Salem
#SnakeBite
#HealthcareNews
#TamilNadu
#PublicHealth
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications