சேலத்தில் கொடூரம்: வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

சேலம் அரிசிபாளையத்தில் வீட்டின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் பெண்ணின் உடல் ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரமான கொலைச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் வயது சுமார் 35 முதல் 40 வரை இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த விவரம் வெளியானது இப்படித்தான். அரிசிபாளையம், குணபாலன் ராமசாமி வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஒரு பூசாரி ஆவார். குடும்பத்துடன் கும்பகோணத்திற்குச் சென்றுவிட்டு கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்ததும் தண்ணீர் குழாயைத் திறந்து பார்த்தபோது, நீரிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து சந்தேகம் அடைந்த ரமேஷ், வீட்டின் மேல் பகுதியில் இருந்த இரண்டு தண்ணீர் தொட்டிகளையும் சோதனையிட்டுள்ளார். அப்போது ஒரு தண்ணீர் தொட்டியின் உள்ளே பிளாஸ்டிக் பை ஒன்றில் பெண்ணின் கால் பகுதி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த தொட்டியை ஆய்வு செய்தபோது, அங்கேயும் அதே போன்றதொரு பிளாஸ்டிக் பையில் உடல் பாகங்கள் இருந்துள்ளன. இது குறித்து உடனடியாக ஏ.பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மேல் கூரையில் இருந்த மற்றொரு பிளாஸ்டிக் பையையும் கண்டெடுத்தனர். மொத்தம் மூன்று பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் பிரிக்கப்பட்டு, வீட்டின் மேல் கூரை மற்றும் தண்ணீர் தொட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. உடற்கூறாய்வுக்காக உடல் பாகங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் 'கணபதி' என்ற பச்சை குத்தப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ரமேஷும் அவரது குடும்பத்தினரும் ஊரில் இல்லாததை அறிந்த யாரோ ஒருவர், இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்துள்ளனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டும், இந்தத் துரதிர்ஷ்டவசமான பெண்ணின் அடையாளம் குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.









