dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடுவணிகம்

சேலம்: எடப்பாடி பகுதியில் தாக்கும் இலைக்கருகல் நோய் - தக்காளி விவசாயிகள் கடும் பாதிப்பு

By K. ராதாகிருஷ்ணன்
84 views
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இலைக்கருகல் மற்றும் இலைச் சுருட்டு நோயால் தக்காளி விளைச்சல் பாதியாகக் குறைந்து விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இலைக்கருகல் மற்றும் இலைச் சுருட்டு நோயால் தக்காளி விளைச்சல் பாதியாகக் குறைந்து விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அரசிபாளையம், தேவூர், கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில், வத்தங்காடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி பயிர்களை இலைக்கருகல் மற்றும் இலைச் சுருட்டு நோய்கள் தாக்கியுள்ளதால், விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் பயிரிடப்பட்ட தக்காளிப் பயிர்கள் தற்போது அறுவடை நிலையை எட்டியுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவியுள்ள இலைக்கருகல் நோய் காரணமாகச் செடிகள் கருகி வாடி வருவதாகவும், இலைச் சுருட்டு நோயால் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுவாக, ஏக்கருக்கு ஐந்து டன் வரை தக்காளி மகசூல் கிடைத்து வந்த நிலையில், நோய்த்தாக்குதலால் தற்போது இரண்டு டன் மட்டுமே விளைச்சல் கிடைப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய சுமார் 50,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். விளைச்சல் பாதியாகக் குறைந்துள்ள சூழலில், சந்தையில் வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை 20 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்வதால், தங்களது முதலீட்டைக்கூட திரும்பப் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளி உள்ளூர் சந்தைகளுக்கும், ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள இந்த நோய்த்தாக்குதல் குறித்துத் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து, அது மேலும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலமே மீதமுள்ள பயிர்களையாவது பாதுகாக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#தக்காளிவிவசாயம்
#சேலம்
#எடப்பாடி
#விவசாயிகள்பாதிப்பு
#தோட்டக்கலை
#SalemFarmers
#TomatoCrop
#Edappadi
#AgricultureNews
#CropLoss
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications