திகில் கலந்த நகைச்சுவையாக உருவாகும் சங்கராபரணம்: டிரெய்லர் வெளியீடு

சுமந்த் பட் இயக்கத்தில் ஷைன் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள சங்கராபரணம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
தேசிய விருது பெற்ற மித்யா திரைப்படத்தின் இயக்குனர் சுமந்த் பட், தனது அடுத்த படைப்பாக சங்கராபரணம் என்ற படத்தை இயக்கி வருகிறார். எதார்த்தமான கதைகளை கையாண்ட சுமந்த் பட், இம்முறை முழுமையான கமர்ஷியல் மற்றும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக இதை உருவாக்கியுள்ளார். கடலோர கர்நாடகாவின் தனித்துவமான தனியார் பேருந்து கலாச்சாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் கதையானது நடிகர் ஷைன் ஷெட்டியின் சொந்த பயணங்கள் மற்றும் காராவளி மற்றும் மல்நாட் பகுதிகளின் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்துக்குள் சிக்கிக்கொள்ளும் பயணிகள், அங்கிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறும் சூழலை மையப்படுத்தி கதை நகர்கிறது. கடனில் தத்தளிக்கும் ஒரு பேருந்து ஓட்டுநராக ஷைன் ஷெட்டி நடித்துள்ளார். கிராமத்து பயணிகளுடனான உரையாடல்கள் மற்றும் பழைய பேருந்தை இயக்கும் சவால்கள் என படம் தொடங்கும் போது இயல்பாகத் தெரிந்தாலும், சூரியன் மறைந்த பிறகு கதையின் போக்கு அதிரடியாக மாறுகிறது.
பயணத்தின் போது அடர்ந்த வனப்பகுதி மற்றும் சாபத்திற்குரியதாகக் கருதப்படும் மூடுபனி நிறைந்த பாலத்தை கடக்கும் தருணத்தில், எதிர்பாராத வகையில் அமானுஷ்ய சக்திகள் பேருந்தில் நுழைகின்றன. வழக்கமான கிராமத்து பயணம், பயணிகளின் அலறல் சத்தத்துடன் ஒரு பயங்கரமான அனுபவமாக மாறுகிறது. திரைக்கதையை ஷைன் ஷெட்டி மற்றும் திரிலோக் திரிவிக்ரமா இணைந்து எழுதியுள்ளனர். ஷைன் ஷெட்டி தனது ரங்கஸ்தலா ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை தன்வி ராம் நாயகியாக நடிக்க, சம்பத் குமார் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கிருத்தி ஷெட்டி, தீபக் ராய் பனாஜே மற்றும் மைம் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சரண் ராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, உதய் குரானா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









