தொடங்கியது சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2: ஆர்யா வெளியிட்ட உற்சாகமான அறிவிப்பு

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2021-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் அடுத்த பாகமான சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இது குறித்த தகவலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குத்துச்சண்டை வளையத்தைப் போன்ற சுவரொட்டியை வெளியிட்டு, சார்பட்டா பரம்பரையின் தொடக்கம் இதோ என அவர் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. எனினும், படத்தின் கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு குறித்த விவரங்கள் நீண்ட நாட்களாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. தற்போது பா. ரஞ்சித் தனது மற்ற படப் பணிகளை முடித்துவிட்டு முழுமையாக இப்படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். வெளியான சுவரொட்டியின் மூலம், இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், அதன் முன்கதையாக அதாவது பிரீகுவலாக உருவாகிறது என்பது உறுதியாகியுள்ளது.
முந்தைய பாகத்தில் வட சென்னையின் குத்துச்சண்டை கலாச்சாரம், இரண்டு பரம்பரைகளுக்கு இடையிலான மோதல் மற்றும் அரசியல் பின்னணி மிக நேர்த்தியாகக் காட்டப்பட்டிருந்தது. அதே பாணியில் இந்த இரண்டாம் பாகமும் ஒரு அரசியல் கலந்த விளையாட்டுத் திரைப்படமாக உருவாகும் என பா. ரஞ்சித் ஏற்கனவே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். முதல் பாகத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டை காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் ஆளுமைத்திறன் இந்த பாகத்திலும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பட்டா பரம்பரை முதல் பாகம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது மீண்டும் அதே குழுவுடன் இணைந்து ஆர்யா களமிறங்கியுள்ளதால், இந்த பிரீகுவல் எந்த அளவிற்கு எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. படம் குறித்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.









