தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமா மீண்டும் போட்டியிட தீவிரம்

1967-க்கு பிறகு தாராபுரம் தொகுதியில் முதல் முறையாக அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தீவிர ஆயத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
1967-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்து வரும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், முதன்முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2026-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.சத்யபாமா, பின்னர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, தாராபுரம் அரசியல் களத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சத்யபாமாவும், திமுக சார்பில் டி.இந்திரானியும், தவெக சார்பில் கௌரி சித்ராவும் களம் கண்டனர். இதில் 81,100 வாக்குகள் பெற்று சத்யபாமா வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் இந்திரானியும், மூன்றாவது இடத்தில் தவெகவின் கௌரி சித்ராவும் இருந்தனர். தேர்தலுக்குப் பிறகு கட்சி மாறிய சூழலில், தற்போது தவெகவின் தாராபுரம் மாவட்டச் செயலாளராக இருக்கும் சத்யபாமா, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், தனது மகன் அல்லது மருமகளுக்கு வாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சத்யபாமாவின் கட்சித் தாவல் நடவடிக்கை அந்தத் தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என்றும், அதற்குத் தான் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மறுபுறம், தவெக சார்பில் மீண்டும் களம் காண கௌரி சித்ராவும் ஆர்வம் காட்டி வருகிறார். தவெகவுக்கு ஆதரவளிக்கும் நிலையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், சத்யபாமாவை மீண்டும் வேட்பாளராக நிறுத்தினால் தங்களது ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் கயல்விழி என்.செல்வராஜ் மற்றும் தாராபுரம் நகராட்சி தலைவர் கே.பாப்புக்கண்ணன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும் அதிமுக தரப்பிலும் பல நிர்வாகிகள் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, பங்க் மகேஷ் என்பவரின் பெயர் அடிபடுகிறது. இது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.செல்வகுமரன் கூறுகையில், கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டிய வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும், விரைவில் இறுதி முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக மற்றும் தவெக என மும்முனைப் போட்டி நிலவுவதால், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.









