dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகையில் பெரும் குளறுபடி: சி.ஏ.ஜி அதிர்ச்சி அறிக்கை

By Admin
09/09/2026
30 views
தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகையில் பெரும் குளறுபடி: சி.ஏ.ஜி அதிர்ச்சி அறிக்கை

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களில் மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டங்களில் கடுமையான நடைமுறைச் சிக்கல்களும், நிதி முறைகேடுகளும் நிலவுவதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) தனது சமீபத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. பள்ளி அளவில் மாணவர் இடைநிற்றலைத் தடுப்பதற்காக 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'ப்ரீ-மெட்ரிக்' திட்டமும், உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 'போஸ்ட்-மெட்ரிக்' திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தத் திட்டங்கள் முறையாகச் சென்றடையவில்லை என்பது தணிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

கடந்த 2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், தகுதியுள்ள பல மாணவர்கள் இந்தத் திட்டங்களின் கீழ் கொண்டு வரப்படவில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர்களில் ப்ரீ-மெட்ரிக் திட்டத்தில் 21 சதவீதம் முதல் 52 சதவீதம் வரையிலும், போஸ்ட்-மெட்ரிக் திட்டத்தில் 20 சதவீதம் முதல் 29 சதவீதம் வரையிலும் மாணவர்கள் விடுபட்டுள்ளனர். பழங்குடியின மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது; இவர்களுக்கு முறையே 35-55 சதவீதம் மற்றும் 30-42 சதவீதம் என உதவித்தொகை கிடைக்காமல் போனது கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எட்டு மாவட்டங்களில், சுமார் 46 சதவீதப் பள்ளிகள் ப்ரீ-மெட்ரிக் திட்டத்தையும், 39 சதவீதப் பள்ளிகள் போஸ்ட்-மெட்ரிக் திட்டத்தையும் பயன்படுத்தவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதிலும் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளன. ஆய்வு செய்யப்பட்ட 9,076 விண்ணப்பங்களில், 28 சதவீத விண்ணப்பங்களில் வருமானச் சான்றிதழோ அல்லது சாதிச் சான்றிதழோ இணைக்கப்படவில்லை. இது முறையான தகுதியுள்ள நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும், மேலாண்மை ஒதுக்கீட்டில் சேர்ந்த 9,728 மாணவர்களுக்கு, அரசு இடங்கள் நிரப்பப்பட்டதா என்பதைச் சரிபார்க்காமல், 82.59 கோடி ரூபாய் கல்விக்கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 160 மாணவர்களுக்கு மாநில அரசின் பங்கு இரண்டு முறை வழங்கப்பட்டதும், 253 மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் இருமுறை வரவு வைக்கப்பட்டதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

நிதி வழங்கலில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் குளறுபடிகள் மாணவர்களைக் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளன. சுமார் 36,510 உதவித்தொகை பரிவர்த்தனைகள் 7.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல மாதங்கள் தாமதமாக வழங்கப்பட்டுள்ளன. வங்கி கணக்கு முடக்கம் போன்ற காரணங்களால் சுமார் 1.61 கோடி ரூபாய் உதவித்தொகை பயனாளிகளைச் சென்றடையாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளது. முறையான மென்பொருள் கண்காணிப்பு இல்லாமை, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமை மற்றும் சமூக தணிக்கை இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என்று சி.ஏ.ஜி குற்றம் சாட்டியுள்ளது. தகுதியுள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிதல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் வலுவான சரிபார்ப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கல்விஉதவித்தொகை
#தமிழகம்
#சிஏஜி
#மாணவர்கள்
#செய்தி
#Scholarship
#TamilNadu
#CAGReport
#EducationNews
#StudentWelfare
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications