தென்னிந்திய ரயில்களில் தொடர் கொள்ளை: 67 வயது முதியவர் அதிரடி கைது, ரூ. 8 லட்சம் பறிமுதல்

ரயில்களில் கொள்ளையடித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 67 வயது முதியவரை காட்பாடி ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் பதிவான பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். ராஞ்சியைச் சேர்ந்த சுமன் குமார் ஸ்ரீவாஸ்தவா என்ற 67 வயதுடைய நபர், ரயில்களில் பயணிகளின் உடைமைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் பிடிபட்டுள்ளார். இவர் தென்னிந்தியாவில் இயங்கும் பல்வேறு ரயில்களில் நீண்ட நாட்களாகத் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் காட்பாடி ரயில் நிலையத்தில் பதிவான இரண்டு வெவ்வேறு திருட்டு வழக்குகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்த காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவா செந்தில் குமார் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அந்தப் படை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியின் நடமாட்டத்தைக் கண்டறிந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு, குற்றவாளியை ஜார்க்கண்ட் மாநிலத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
விசாரணையில், சுமன் குமார் ஸ்ரீவாஸ்தவா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிகவும் தந்திரமான முறையில் கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் வழக்கமான பயணிகள் போலவே ஏசி பெட்டிகளில் பயணம் செய்து, தூங்கும் பயணிகளை நோட்டமிட்டு தங்கம் மற்றும் பணத்தைத் திருடி வந்தனர். திருடியவுடன் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இறங்கி, அங்கிருந்து பேருந்து அல்லது கார் மூலமாகத் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். திருடப்பட்ட நகைகளை விற்று, அந்தப் பணத்தை மறைத்து வைத்திருந்த நிலையில், காவல்துறையினர் அவரிடமிருந்து ரூ. 8 லட்சம் ரொக்கத்தை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சுமன் குமார் ஸ்ரீவாஸ்தவா மீது பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 303(2)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து தென்னிந்தியா முழுவதும் பல ரயில்களில் கைவரிசை காட்டியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. புதன்கிழமை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிப்பதற்கான விரிவான புலன் விசாரணையை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.









