சிறுமுகை சிகிச்சை மையத்தில் தேறிய குட்டி யானை: முகாமிற்கு மாற்ற வனத்துறை திட்டம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மீட்கப்பட்ட குட்டி யானை ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து தவித்த ஐந்து மாத பெண் யானைக் குட்டி, தற்போது சிறுமுகை பெத்திக்குட்டையில் உள்ள வனவிலங்கு இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் (WTTC) தீவிர பராமரிப்பில் உள்ளது. கடந்த ஒரு மாதமாக அங்கு வழங்கப்பட்ட தொடர் சிகிச்சைகளின் பலனாக அந்த யானைக் குட்டியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட போது எந்தவித காயங்களும் இன்றி காணப்பட்ட இந்தக் குட்டி யானைக்கு, மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யானைக் குட்டியின் உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் வனக்கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் என். வெங்கடேஷ் பிரபு இது குறித்து தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ராவிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, இந்தக் குட்டி யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாம் அல்லது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. மற்ற யானைக் குட்டிகளுடன் பழகுவது அதன் மன ரீதியான மற்றும் உடல் ரீதியான வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை மையத்தில் உள்ள யானைக் குட்டிக்கு தற்போது பிரத்யேக பாகன் மற்றும் காவாடி மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவக் குழுவின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை பால் மற்றும் இளநீர் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குட்டி யானை தற்போது உற்சாகமாக விளையாடுவது, நன்றாக நடப்பது மற்றும் உறங்குவது என ஆரோக்கியமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக வனத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஆரம்ப நாட்களில், அந்த யானைக் குட்டியை அதன் தாயுடன் அல்லது கூட்டத்துடன் மீண்டும் இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், நீண்ட நாட்களாகியும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை. இதன் பின்னரே, அதன் உடல்நிலையை கருத்தில் கொண்டு முறையான பராமரிப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அனைத்து உடல்நலக் குறியீடுகளும் இயல்பான நிலையில் இருப்பதால், பாதுகாப்பான யானைகள் முகாமிற்கு மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.









