சிவகங்கை: டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர் மீது கஞ்சா வழக்கு - காவலர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

சிவகங்கையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவரை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க முயன்ற காவலர் மற்றும் மதுக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திருக்களாப்பட்டி கிராமத்தில் பள்ளிக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன், கடைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த சூழலில், கடந்த நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, குறித்த கடையை நவம்பர் 14-ஆம் தேதிக்குள் அகற்றுவதாக அதிகாரிகள் தரப்பில் எழுத்துப்பூர்வமான உறுதிமொழி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்திற்கு முன்னின்று செயல்பட்ட ராஜ்குமார் என்ற கடை உரிமையாளரை பழிவாங்கும் நோக்கில் சதி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம், தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதுக்கடை உரிமையாளர் சொக்கநாதன் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் இணைந்து, ராஜ்குமாரை கஞ்சா வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 5-ஆம் தேதி காலை 8.13 மணியளவில், ராஜபாண்டி மற்றும் ஆசை ஆகிய இருவர் ராஜ்குமாரின் கடைக்கு முன்பாக கஞ்சா பொட்டலத்தை வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. சரியாக இரண்டு நிமிட இடைவெளியில், அங்கு வந்த விக்னேஷ் என்ற காவலர் உள்ளிட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி ராஜ்குமாரை கைது செய்ய மிரட்டியுள்ளனர். ஆனால், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சரிபார்க்குமாறு ராஜ்குமார் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த கஞ்சா பொட்டலத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டதாக சண்முகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ராஜ்குமார் புகார் அளித்தும், காவல்துறையினர் அதனைப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மாறாக, அதே காவல்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காவல்துறையினரின் செயல்பாடு மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், சம்பந்தப்பட்ட காவலர் மற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்ட மதுக்கடை உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட நபர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சிபிஎம் மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.









