சிவகங்கை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்டவர் விடுதலை - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை போதிய ஆதாரங்கள் இல்லாததால் உயர் நீதிமன்ற மதுரை கிளை விடுவித்தது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 49 வயதுடைய நபர் ஒருவரை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடைமுறைகளில் இருந்த குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முறையான நீதி கிடைக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர், 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளை பணம், தின்பண்டங்கள் மற்றும் அலைபேசியில் விளையாட்டுகள் காட்டுவதாகக் கூறி தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தண்டனையை உறுதி செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் போக்கில் இருந்த பல ஓட்டைகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியது.
வழக்கின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான உறுதியான ஆதாரங்களை அரசுத் தரப்பு முன்வைக்கத் தவறிவிட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, சிறுமிகளை வரவழைக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட அலைபேசி மீட்கப்படவில்லை என்பதும், குறுக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் முழுமையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்கள் நம்பகத்தன்மை இன்றி இருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் சிறுமிகளின் பெற்றோருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக அவர்கள் தூண்டப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சந்தேகம் எழுவதாகவும் நீதிமன்றம் கருதியது.
இந்த வழக்கில் மரண தண்டனை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை விசாரணை நீதிமன்றம் சரியாகப் பின்பற்றவில்லை என்று நீதிபதிகள் விமர்சித்தனர். ஒரு நபருக்கு அளிக்கப்பட வேண்டிய சட்ட உதவி மற்றும் நியாயமான விசாரணைக்கான அடிப்படை உரிமைகள் இந்த வழக்கில் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், இது நீதியின் குரல்வளையை நெரிக்கும் செயலாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை மற்றும் தீர்ப்பை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெற வேண்டாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.









