சிவகiசியில் தொடர் கொள்ளையர்கள் கைது: தந்தை, மகன் உட்பட 3 பேர் சிக்கினர்

சிவகiசியில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தந்தை, மகன் உட்பட 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நீண்டகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூவர் அடங்கிய கும்பலை சிவகாசி நகர காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தந்தை மற்றும் மகனும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர்கள், காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த முருகு (70), அவரது மகன் சுப்புராஜ் (33) மற்றும் சிவகாசியைச் சேர்ந்த அவர்களின் உறவினரான தவசீலன் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிவகாசி பகுதியில் உள்ள வீடுகளில் இந்த மூவரும் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். இது குறித்த புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிவகாசி நகர போலீஸார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். விசாரணையின் ஒரு கட்டமாக, இந்த மூவரும் சிவகாசிக்கு அருகிலுள்ள தனிமையான பகுதியில் பதுங்கியிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் அந்த இடத்தை முற்றுகையிட்டு, பதுங்கியிருந்த மூவரையும் கைது செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில், முருகு மீது மட்டும் சுமார் 26 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், சுப்புராஜ் மற்றும் தவசீலன் ஆகியோர் மீது தலா ஒன்பது வழக்குகள் மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர்கள் என்றும், ஆனால் நீதிமன்றம் மற்றும் காவல் நிலையங்களில் உரிய நேரத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாகவும், இதற்காக அவர்கள் மீது பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக, முருகு மீது 2016-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தில் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கமும், நூறு சவரனுக்கும் அதிகமான தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பல் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக காவல்துறையினரை ஏமாற்றி வந்த இவர்களின் கைது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









