சிவகாசி அருகே பரபரப்பு: புதிய போன் கேட்டு 3 வயது குழந்தையை கத்தியால் மிரட்டி சிறைவைத்த 14 வயது சிறுமி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதிய மொபைல் போன் வேண்டும் என பிடிவாதம் பிடித்து 3 வயது குழந்தையை கத்தியால் மிரட்டி சிறைவைத்த 14 வயது சிறுமி மீட்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பகுதியில், புதிய மொபைல் போன் வேண்டும் என வலியுறுத்தி, 3 வயது சிறுவனை கத்தியால் மிரட்டி சிறைவைத்த 14 வயது சிறுமியின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு தொடங்கி, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. பெற்றோரை இழந்த அந்தச் சிறுமி, தனது மூத்த சகோதரி மற்றும் உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். சிறுமி தனது சகோதரியின் மொபைல் போனை பயன்படுத்தி வந்த நிலையில், தனக்கென ஒரு புதிய 'நத்திங்' (Nothing) ரக மொபைல் போன் வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில், சிறுமி தனது உறவினரின் 3 வயது மகனை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டார். ஆரம்பத்தில் விளையாட்டு என்று நினைத்த குடும்பத்தினர், சிறிது நேரத்தில் சிறுமி கத்தியால் குழந்தையின் கழுத்தில் மிரட்டத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்குத் தேவையான மொபைல் போன் கிடைத்தால் மட்டுமே குழந்தையை விடுவிப்பேன் என அவர் பிடிவாதம் பிடித்தார். இதனையடுத்து, குடும்பத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு நேரம் என்பதால் கடைகள் மூடப்பட்டிருந்த சூழலில், காவல் துறையினரும் உறவினர்களும் இணைந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து, ஒரு மொபைல் கடை உரிமையாளரைத் தொடர்பு கொண்டு அந்த குறிப்பிட்ட ரக போனை ஏற்பாடு செய்தனர். இந்த முயற்சிகளுக்குப் பிறகு, நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அந்த புதிய கைபேசி சிறுமிக்கு வழங்கப்பட்டது.
போன் கிடைத்தவுடன், சிறுமி எவ்வித பாதிப்புமின்றி குழந்தையை விடுவித்தார். சுமார் ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டது உறவினர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது. சிறுமியின் இந்த விபரீத செயலுக்கான பின்னணி மற்றும் அவரது மனநிலை குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம், அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.









