ஸ்லோவாக்கியா விசா சிக்கல்: இந்திய மல்யுத்த வீரர்கள் பயணம் செய்வதில் ஏற்பட்ட தடங்கலும் பின்னணியும்

ஸ்லோவாக்கியாவில் நடைபெறும் யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவிருந்த இந்திய வீரர்களின் விசா விண்ணப்பம் மனித கடத்தல் அச்சம் காரணமாக தாமதமானது.
ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா நகரில் ஆகஸ்ட் 16 முதல் 23 வரை நடைபெறவிருக்கும் யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த இந்திய வீரர்களின் பயணம் பெரும் இழுபறிக்கு உள்ளானது. போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய மல்யுத்த சம்மேளனம் ஜூலை 21 அன்றே விசா கோரி விண்ணப்பித்திருந்தது. இருப்பினும், ஸ்லோவாக்கிய தூதரகம் உரிய நேரத்தில் பதிலளிக்காததால், வீரர்களின் பயணம் கேள்விக்குறியானது. இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம், விளையாட்டு அமைச்சகம் மற்றும் ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு ஆகியவை இணைந்து செயல்பட்டதன் மூலமே தற்போது விசா கிடைப்பதற்கான வழி பிறந்துள்ளது.
இந்தத் தாமதத்திற்குப் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் காரணம் ஒன்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்தியாவைச் சேர்ந்த பிற விளையாட்டு வீரர்கள் ஜூன் மாதம் ஸ்லோவாக்கியாவிற்குச் சென்றபோது, அவர்களில் சிலர் காணாமல் போனதும், அவர்கள் சட்டவிரோதமாக தங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக, ஸ்லோவாக்கியா தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களின் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாக ஆய்வு செய்ததாகவும், இதனால் தான் மல்யுத்த வீரர்களின் விசா செயல்முறை தாமதமானதாகவும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மல்யுத்த வீரர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய இக்கட்டான சூழலைத் தீர்க்க, இந்திய வீரர்கள் அனைவரும் போட்டி முடிந்தவுடன் தாயகம் திரும்புவார்கள் என்றும், தேவைப்பட்டால் தூதரகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் வருகையை உறுதிப்படுத்துவதாகவும் மல்யுத்த சம்மேளனம் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்தியக் குழுவில் 30 மல்யுத்த வீரர்கள், 9 பயிற்சியாளர்கள், 3 பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் 3 நடுவர்கள் என மொத்தம் 45 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பின் தலைவர் நெனாட் லாலோவிக், தங்களது அமைப்பின் கீழ் உள்ள வீரர்களின் அடையாளங்களுக்கு தாங்கள் உத்தரவாதம் அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பங்களை நீக்க தங்களது தரப்பு பெரும் முயற்சிகளை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
ஸ்லோவாக்கிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் ஜான் கார்ஸ்னக், பிற விளையாட்டுப் பிரிவினரால் ஏற்பட்ட சிக்கல்கள்தான் இந்தத் தாமதத்திற்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், குறிப்பிட்ட அந்த விளையாட்டு வீரர்கள் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். விசா பெறுவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால், இந்திய மல்யுத்த வீரர்கள் குழு குழுவாக ஸ்லோவாக்கியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளது. முதல் குழுவான கிரேக்க-ரோமன் மல்யுத்த வீரர்கள் ஆகஸ்ட் 14 அன்று பயணிக்க உள்ளனர், அதனைத் தொடர்ந்து மற்ற பிரிவினரும் பயணத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.









