வீடுகளில் சோலார் மின்சாரம்: கட்டணங்களை ரத்து செய்ய தமிழ்நாடு மின் வாரியம் திட்டம்

தமிழ்நாட்டில் வீடுகளில் மேற்கூரை சோலார் அமைக்கும் பயனாளர்களுக்கு பல்வேறு கட்டணங்களை ரத்து செய்ய மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கு மேற்கூரை சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை (Rooftop Solar) நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில், அதற்கான ஆரம்பக்கட்ட செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) ஈடுபட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம் மற்றும் இருதிசை மின்மானி (Bi-directional meter) செலவு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை ரத்து செய்வதற்கு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TNERC) அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவின்படி, வீடுகளில் உள்ள சிங்கிள் பேஸ் மின் இணைப்பை த்ரீ பேஸ் இணைப்பாக மாற்றும் கட்டணம் மற்றும் 10 கிலோவாட் வரையிலான மின் சுமையை உயர்த்துவதற்கான கட்டணங்கள் போன்றவற்றிற்கும் விலக்கு அளிக்கப்பட உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, ஒரு வீட்டிற்கு சுமார் 3,000 ரூபாய் வரை செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆணையத்தின் முறையான அனுமதி கிடைத்தவுடன், இந்த சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 'பிஎம் சூர்ய கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் மின் நிலையம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் கூடுதலாக, தமிழக அரசு கடந்த மாதம் ஒரு சிறப்பு மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், 3 கிலோவாட் சோலார் அமைப்பை நிறுவும் இல்லங்களுக்கு மொத்தம் 1 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது. சோலார் மின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இந்த கூடுதல் மானிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதத்திற்குள் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 35,000 நுகர்வோர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஏப்ரல் 2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் சுமார் 87,000 வீடுகளில் மட்டுமே சோலார் அமைப்புகள் இருந்தன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கவும் பிரத்யேக ஆன்லைன் போர்ட்டல் ஒன்றையும் மின் வாரியம் உருவாக்கியுள்ளது.









