சென்னையில் குடும்பத் தகராறு: மாமியாரைக் கத்திரிக்கோலால் குத்திய மருமகன் கைது

சென்னையில் மாமியாரைக் கத்திரிக்கோலால் குத்திய மருமகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 26 வயதுடைய நபர் ஒருவர் தனது மாமியாரைக் கத்திரிக்கோலால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மகாலட்சுமி, குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த ஒரு மாதமாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். தனது மனைவியை மீண்டும் தன்னுடன் வருமாறு வற்புறுத்தி வந்த விஜய், அடிக்கடி அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இரவு, புளியந்தோப்பு பேருந்து நிலையம் அருகே மகாலட்சுமி தனது தாயார் டில்லி (42) மற்றும் உறவினர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஜய், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென அங்கிருந்த கல்லை எடுத்து அவர் வீசியதில், டில்லியின் மூத்த சகோதரியின் பேத்தி காயமடைந்தார். உடனடியாக அந்த சிறுமியை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த பிறகு, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் மீண்டும் அங்கு வந்த விஜய், ஆத்திரத்தில் தனது மாமியார் டில்லியை மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் தலையில் சரமாரியாகக் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த டில்லி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக டில்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், புளியந்தோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த விஜய்யைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரைப் பிடித்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஜய், சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் குடும்பப் பிரச்சினையால் ஆத்திரமடைந்த நபர் ஒரு குடும்பத்தையே அச்சுறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.









