ஸ்ரீல பிரபுபாதாவின் வாழ்க்கை வரலாற்று அனிமேஷன் படம்: புதிய முயற்சியில் ஹோம்பாலே பிலிம்ஸ்

இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'சரணாகதி' அனிமேஷன் திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது.
கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிரம்மாண்டமான வெற்றித் திரைப்படங்களை வழங்கி இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தற்போது அனிமேஷன் துறையில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்கான் (ISKCON) அமைப்பின் நிறுவனரான ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி சரணாகதி - த லைஃப் ஆஃப் எ சரண்டர்டு சோல் (Saraṇāgati – The Life of a Surrendered Soul) என்ற புதிய அனிமேஷன் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்காக ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் ட்ரான்ஸ்செண்டெண்டல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இந்தத் திரைப்படம் 1965-ம் ஆண்டு, தனது 69-வது வயதில் ஸ்ரீல பிரபுபாதா எதிர்கொண்ட சவால்களையும், பகவத் கீதையின் போதனைகளை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்ல அவர் மேற்கொண்ட பயணத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. வெறும் நாற்பது ரூபாயுடன் சரக்குக் கப்பலில் நியூயார்க் நகரத்திற்குப் புறப்பட்ட அவரது பயணம், எவ்வாறு உலகளாவிய ஆன்மீக இயக்கமாக மாறியது என்பதை இந்தப் படம் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது. கௌர சக்தி தாஸா இப்படத்தை எழுதி இயக்குகிறார், மேலும் ராஜேஷ் சிங் மற்றும் லோகித் ராவ் ஆகியோர் படத்தைத் தயாரிக்கின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் இந்திய அனிமேஷன் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான அனிமேஷன் முறைகளைக் காட்டிலும், ஏஐ மோஷன் கேப்சர் (AI motion capture) தொழில்நுட்பத்தை இதில் பயன்படுத்துகின்றனர். நிஜ மனிதர்களின் அசைவுகள், முகபாவனைகள் மற்றும் உடல் மாற்றங்களை பல கேமராக்கள் மூலம் நிகழ்நேரத்தில் கண்காணித்து, அவற்றை தத்ரூபமாகத் திரையில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் அனிமேஷன் கதாபாத்திரங்கள் செயற்கையாக இல்லாமல், மிகவும் இயல்பாகத் தெரிவதை உறுதி செய்யப் படக்குழு முனைப்பு காட்டுகிறது.
காந்தாரா போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களை உலகத் தரத்தில் உருவாக்கிய ஹோம்பாலே பிலிம்ஸ், இந்த அனிமேஷன் முயற்சி மூலம் இந்திய ஆன்மீக வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. மகா அவதார் நரசிம்மா என்ற அனிமேஷன் படைப்பைத் தொடர்ந்து ஹோம்பாலே நிறுவனம் கையில் எடுத்துள்ள இந்த முக்கியத் திட்டம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் குரல் கலைஞர்கள் மற்றும் வெளியீடு குறித்த கூடுதல் தகவல்கள் வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









