இலங்கை கடற்பரப்பில் பீடி இலை கடத்தல்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் 2,400 கிலோ பீடி இலைகளை கடத்த முயன்ற தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முயன்றதாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் அருகே உள்ள உடப்புவா கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நகர்ந்த நாட்டுப் படகுகளைக் கண்காணித்த இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர், அந்த படகுகளை மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது சுமார் 2,400 கிலோ எடையுள்ள பீடி இலைகள் 60 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம். ஆனந்த் அருளப்பன் (47) மற்றும் எஸ். தினேஷ் (34) ஆகியோரும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஸ்டன் (26), நிஷாந்த் பி. ராயன் (38), ஜே. மைக்கேல் (31), ஜே. நிஷாந்த் (21) மற்றும் ஜே. வி. செல்வம் (30) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நான்கு இலங்கை நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய நாட்டுப் படகுகளில் இருந்து பீடி இலைகளை இலங்கை நாட்டுப் படகுகளுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயணம் செய்த இரண்டு இந்திய நாட்டுப் படகுகள் மற்றும் இலங்கை நாட்டவர்களுக்குச் சொந்தமான இரண்டு டிங்கி படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், இந்த இரண்டு இந்திய நாட்டுப் படகுகளும் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி காயல்பட்டினத்தில் உள்ள சிங்கித்துறை மற்றும் திருநெல்வேலி கடற்கரை பகுதியில் உள்ள கூத்தன்குளி ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டது தெரியவந்துள்ளது. அக்டோபர் 22-ஆம் தேதி இவர்கள் கடலில் வைத்துப் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட 11 நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் படகுகளும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காகக் கொழும்பில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அண்டை நாட்டு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









