மேஜிக்: தி கேதரிங் திரைப்படத்தில் இணையும் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் நட்சத்திரம் மாயா ஹாக்

பிரபலமான 'மேஜிக்: தி கேதரிங்' கார்டு கேம் தழுவல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மாயா ஹாக் ஒப்பந்தமாகியுள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மாயா ஹாக், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பில்லியன் டாலர் மதிப்புள்ள புகழ்பெற்ற கார்டு கேம் பிரான்சைஸான மேஜிக்: தி கேதரிங் (Magic: The Gathering) அடிப்படையிலான லைவ்-ஆக்சன் திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் மாயா ஹாக் 'பிளேன்ஸ்வாக்கர்' (Planeswalker) என்று அழைக்கப்படும் மாயாஜால மந்திரவாதி கதாபாத்திரங்களில் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கற்பனை உலகில் வீரர்கள் மந்திரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள் மற்றும் ஒவ்வொரு கார்டும் ஒரு சக்திவாய்ந்த மந்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல பிளேன்ஸ்வாக்கர்கள் கொண்ட இந்த பிரபஞ்சத்தில், முதல் கதாபாத்திரமாக மாயா ஹாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹஸ்ப்ரோ என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கின்றன. நோவா கார்ட்னர் மற்றும் ஐடன் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மேட் ஜான்சன் இந்தப் படத்தை இயக்க உள்ளார். கார்டு கேம்களாகத் தொடங்கி, இன்று வீடியோ கேம்கள், நாவல்கள் மற்றும் காமிக்ஸ் என பல பரிமாணங்களில் வளர்ந்துள்ள இந்த பிரான்சைஸ், தற்போது வெள்ளித்திரையில் புதிய முயற்சியாக வெளிவர உள்ளது.
ரிச்சர்ட் கேனிங் கார்பீல்ட் என்பவரால் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மேஜிக்: தி கேதரிங் கார்டு கேம், உலக அளவில் பல மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது. ஹஸ்ப்ரோ நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, இதன் வணிக வளர்ச்சி அபரிமிதமாக அதிகரித்தது. நடிகை மாயா ஹாக் ஏற்கனவே ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், ஆஸ்டிராய்டு சிட்டி மற்றும் மேஸ்ட்ரோ போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள தி ஹங்கர் கேம்ஸ்: சன்ரைஸ் ஆன் தி ரீப்பிங் திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









