சன்னி தியோல் படத்திற்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

சன்னி தியோல் நடிக்கும் 'சூர்யா: அன்ட் சே ஆரம்ப் தக்' திரைப்படத்தில் மருத்துவர்கள் மீதான வன்முறை சித்தரிக்கப்பட்டுள்ளதால், அதற்குத் தடை விதிக்க இந்திய மருத்துவ சங்கம் (IMA) சென்சார் வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் சன்னி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள 'சூர்யா: அன்ட் சே ஆரம்ப் தக்' (Suryaa: Ant Se Aarambh Tak) என்ற இந்தித் திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கூடாது என இந்திய மருத்துவ சங்கம் (IMA) மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) வலியுறுத்தியுள்ளது. வரும் நவம்பர் 20-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான வன்முறைகள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் அனில்குமார் ஜே. நாயக் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவமனைகளுக்குள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாக்கப்படுவது தொடர்பான காட்சிகள் இப்படத்தின் டீசரில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சென்சார் வாரியத் தலைவர் சஷி சேகர் வேம்பதிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தற்போதைய சூழலில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய காட்சிகள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும், வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றமே மருத்துவர்கள் மீதான வன்முறை அதிகரித்து வருவதை அங்கீகரித்துள்ள நிலையில், இத்திரைப்படம் அந்தப் பாதுகாப்பற்ற உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகளில், வன்முறை மற்றும் மருத்துவர்கள் மீது ஊழல் முத்திரை குத்தும் வசனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்பது முதன்மையானது. இந்தத் திரைப்படத்தை ஐஎம்ஏ பிரதிநிதிகள் முன்னிலையில் திரையிட வேண்டும் என்றும், தணிக்கை குழுவில் மருத்துவ நிபுணர் ஒருவரை இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படம் மருத்துவத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் திரையில் பெரிய அளவில் எச்சரிக்கை வாசகத்தை ஒளிபரப்ப வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாகத் திகழ்கிறது. இந்தத் திரைப்படம் தணிக்கை வாரியத்தின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்படும் முன்பே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் இது குறித்து முறையிடப்பட்டதாக டாக்டர் அனில்குமார் குறிப்பிட்டார். தணிக்கை வாரியம் முடிவெடுக்கும் முன் இந்த எதிர்ப்புக் கடிதத்தைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவர்களை இழிவுபடுத்துவது மற்றும் வன்முறையைத் தூண்டுவது போன்ற செயல்களைத் திரைப்படங்கள் தவிர்க்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்று சங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.









