dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடுஇந்தியா

காவிரி நீர் திறப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை ஆகஸ்ட் 13-ல் விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

By Admin
10/08/2026
140 views
காவிரி நீர் திறப்பு விவகாரம்: தமிழக அரசின் மனுவை ஆகஸ்ட் 13-ல் விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரிக்கிறது.

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஜி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரிக்கும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உரிய தேதியில் விசாரணை நடைபெறும் என்று உறுதிப்படுத்தினர்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, கர்நாடகா உரிய அளவு காவிரி நீரை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) பரிந்துரைத்த மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உறுதி செய்த அளவை விட, மிகக் குறைந்த அளவிலான நீரையே கர்நாடகா திறந்துவிட்டுள்ளதாக தமிழக அரசு தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஜூலை 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரையிலான காலகட்டத்தில் பிலிகுண்டுலுவில் பதிவான நீர்வரத்து மிக மோசமாக, அதாவது 158 முதல் 550 கன அடி வரை மட்டுமே இருந்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய அணைகளின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 77.537 டி.எம்.சி.யாக உள்ளது. எனவே, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டத் தேவையான தண்ணீரை விடுவிப்பதில் கர்நாடகாவிற்கு எவ்வித சிரமமும் இருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில், பிலிகுண்டுலுவில் சுமார் 26.954 டி.எம்.சி நீர் கிடைக்கப்பெற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது. ஆணையம் ஒதுக்கியுள்ள 4.536 டி.எம்.சி என்பது போதாது என்பது தமிழகத்தின் முக்கிய வாதமாக உள்ளது.

தமிழக அரசின் இந்த சட்டப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் தனி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், 2018-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படியும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படியும் கர்நாடகா செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 26 வரையிலான நிலுவைத் தொகையான 9.46 டி.எம்.சி நீரையும் சேர்த்து, பிலிகுண்டுலுவில் தினசரி 7,000 கன அடி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் நீர் திறப்பை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தினசரி அடிப்படையில் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காவிரி
#உச்சநீதிமன்றம்
#தமிழகம்
#கர்நாடகா
#நீர் உரிமை
#Cauvery
#SupremeCourt
#TamilNadu
#Karnataka
#WaterDispute
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications