மாலத்தீவு சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள்: இரண்டு பேர் இன்னும் சிறையில்

மாலத்தீவு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 24 தமிழக மீனவர்கள் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
மாலத்தீவு கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். மத்திய வெளியுறவுத் துறையின் தொடர் முயற்சிகளால் இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். மீன்வளத் துறை அதிகாரிகள் அவர்களை முறையாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இந்தக் குழுவில் மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் 24 பேர் மட்டுமே தற்போது நாடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் முரளிதரன் மற்றும் புவனேஸ்வரன் ஆகிய இருவர், பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல்களால் இன்னும் மாலத்தீவு சிறையிலேயே உள்ளனர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கைத் தூதரகத்திடமிருந்து ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் (NOC) பெறப்பட வேண்டும் என்பதால், அவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 13-ம் தேதி தருவைகுளத்திலிருந்து மூன்று இயந்திரமயமான மீன்பிடிப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், மாலத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் பிடிக்கப்பட்டனர். அவர்களது படகுகள் டோனி து தீவில் உள்ள தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டன. எல்லை தாண்டி மீன்பிடித்தல் மற்றும் உரிய அனுமதியின்றி மீன்பிடித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், அந்த மீனவர்களுக்கு சுமார் 4.77 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை எதிர்த்து மீனவர் சங்கத்தினர் முறையீடு செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட 24 மீனவர்களுக்கான விமானப் பயணச் செலவுகளைத் தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டது. இருப்பினும், மீனவர்களின் வாழ்வாதாரமான அந்த மூன்று படகுகளும் இன்னும் மாலத்தீவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. படகுகளை மீண்டும் ஒப்படைப்பதற்கும், சிறையில் உள்ள மற்ற இரு மீனவர்களை விரைவாக மீட்டு வருவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.









