தமிழ்நாட்டின் ரூ.1.15 லட்சம் கோடி முதலீட்டு திட்டங்கள் வேகம்: நிலம் கையகப்படுத்தலில் முக்கிய முன்னேற்றம்

தமிழ்நாட்டில் கையெழுத்தான ரூ.1.15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் 74 சதவீத பணிகள் நிலம் கையகப்படுத்தும் நிலையை எட்டியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த மே 2026-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் கையெழுத்தான மொத்தம் 112 முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 83 திட்டங்கள் தற்போது நிலம் கையகப்படுத்தும் கட்டத்தையோ அல்லது அதற்கு மேலான முன்னேற்றத்தையோ எட்டியுள்ளன. சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 812 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்கள், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற இருப்பதுடன், சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 771 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் (TNIPC) முதல் கூட்டம், தலைமைச் செயலாளர் டாக்டர் எம். சாய் குமார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்துதல், தொழில் சார்ந்த அனுமதி நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான தடைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. திட்டச் செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் 21 நாட்களுக்குள் அனுமதிகளை வழங்க வேண்டும் என்றும், காலக்கெடு முடிந்தால் தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும் 'டீம்டு அப்ரூவல்' முறையைக் கொண்டுவரவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தாமதங்களுக்குக் காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான உயர் அழுத்த மின் இணைப்புகளை அவர்களே நேரடியாகச் செய்துகொள்ளும் வசதியை தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக, ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூடுதல் நிதியாக ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்கவும் ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டுகளின் சராசரி அளவை விடக் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் ஏற்றுமதி வர்த்தகத்தை 59 பில்லியன் டாலரில் இருந்து 72 பில்லியன் டாலராக உயர்த்தவும், மாவட்ட அளவில் ஏற்றுமதி மாநாடுகளை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான அனுமதிகளை விரைவாக வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா கூறுகையில், முதலீடுகளை வெறும் காகித ஒப்பந்தங்களாக மட்டும் பார்க்காமல், அவை தரைமட்ட அளவில் செயல்பாட்டிற்கு வந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.









