தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள்: ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காலக்கெடு நிர்ணயம் - கல்வித்துறை அதிரடி

தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப 15 முதல் 21 நாட்களுக்குள் அனுமதி வழங்க காலக்கெடு நிர்ணயித்து தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் நிலவும் காலதாமதத்தைத் தவிர்க்க, தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, இனிவரும் காலங்களில் பள்ளி நிர்வாகங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை பரிசீலித்து, உரிய அனுமதி வழங்குவதற்கு வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு 15 நாட்களும், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 21 நாட்களும் காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சென்னை உயர் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் நியமன விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் கல்வித்துறை அதிகாரிகள் காட்டும் அதீத காலதாமதம் காரணமாக, பள்ளிகளும் ஆசிரியர்களும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்குத் தள்ளப்படுவதாக உயர் நீதிமன்றம் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, கல்வித்துறை இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முறையாகப் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவே இந்தத் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்கத் தவறும் அதிகாரிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரித்துள்ளார். மேலும், பணியாளர் நிர்ணயம் மற்றும் உபரி ஆசிரியர்களை மறுபணியமர்த்தல் போன்றவற்றில் ஏற்படும் காலதாமதத்தால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத உதவி பெறும் பள்ளிகளுக்குப் பொருந்தும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தேவையற்ற காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை நிராகரிப்பதைத் தடுக்க, சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த பொதுவான சரிபார்ப்புப் பட்டியல் (Checklist) ஒன்றையும் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு விண்ணப்பமும் பெறப்பட்ட தேதி, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை உள்ளடக்கிய பதிவேடுகளை மாவட்டக் கல்வி அதிகாரிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









