தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ. 289 கோடி நிதி ஒதுக்கீடு: மாநில அரசு அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ. 289 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் தடையின்றி குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 288.97 கோடி ரூபாயை ஒதுக்கி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் பல்வேறு குடிநீர் மேலாண்மை திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு (TWAD) சுமார் 58.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை வேலூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், நீர் உட்செலுத்து கிணறுகளை தூர்வாருதல், சேகரிப்பு கிணறுகளை சுத்தம் செய்தல், பழுதடைந்த மின் கேபிள்களை மாற்றுதல் மற்றும் சர்வே டிரான்ஸ்பார்மர்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 36.64 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கான செலவுகளை ஈடுகட்ட இந்த நிதி பயன்படுத்தப்படும். இதேபோல், பேரூராட்சி இயக்குநரகத்திற்கு 96.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 479 பேரூராட்சிகளில் கண்டறியப்பட்ட குடிநீர் தேவைகளை நிவர்த்தி செய்யவும், வறட்சி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தத் தொகை செலவிடப்படும்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு 97.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிகளுக்கு 57.07 கோடி ரூபாயும், நகராட்சிகளுக்கு 40.28 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும், அதற்கான அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்தச் செலவினங்கள் அனைத்தும் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான கூடுதல் மதிப்பீடுகள் மூலம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









