தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒளிபரப்பு: புதிய டெண்டர் அறிவிப்பு மற்றும் முக்கிய விவரங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் படம்பிடித்து ஒளிபரப்ப புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பதிவு செய்து ஒளிபரப்பு செய்வதற்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான புதிய டெண்டர்களை தமிழக அரசு கோரியுள்ளது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, 2027 ஜனவரி முதல் 2028 டிசம்பர் வரை சுமார் 160 பணி நாட்கள் வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களைத் தடையின்றிப் பதிவு செய்து ஒளிபரப்பும் பணி ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக ஆண்டுக்கு 80 நாட்கள் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் நிறுவனம் சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்து, அவற்றை உடனுக்குடன் எடிட்டிங் செய்து தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒளிபரப்புக்காக வழங்க வேண்டும். இந்தச் செயல்பாட்டில் முக்கிய நிகழ்வுகளைத் தரம் குறையாமல் படம்பிடிக்கவும், ஒளிபரப்பு செய்யவும் நவீன மல்டி-கேமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. பதிவுக் பணிக்காக முதன்மை மற்றும் கூடுதல் (பேக்கப்) என இருவேறு பதிவு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்தத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சைகை மொழி விளக்கத்திற்கும் பிரத்யேக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தனியான கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதன்மைப் பணிக்காகக் குறைந்தது 30 தொழில்நுட்ப வல்லுநர்களும், சைகை மொழி சேவைக்காகத் தனியாக 3 நிபுணர்களும் கொண்ட குழுவை இந்நிறுவனம் பணியமர்த்த வேண்டும் என்று டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பின் போது சில கருத்துகள் நீக்கப்பட்ட பிறகும் ஒளிபரப்பப்பட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, இத்தகைய தொழில்முறை அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட நேரலை ஒளிபரப்பு நடைமுறைகள், தற்போது புதிய தொழில்நுட்பக் கட்டமைப்போடு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் இந்த முயற்சியானது, சட்டப்பேரவை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடனும், துல்லியமாகவும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் எளிதில் பெறும் வகையில் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









